Saturday, August 3, 2019

எங்க ஊரு 'பதினெட்டாம் பேரு'


எங்க ஊரு பதினெட்டாம் பேரு

நான் பிறந்த வடசங்கந்தி கிராமம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது. அங்கு ‘ஆடி 18’ ஆம் நாளை ‘பதினெட்டாம் பேரு’ என்று கொண்டாடி மகிழ்வார்கள்.

காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வெண்ணாற்றில் இருந்து நீடாமங்கலத்திற்கு வடமேற்கில் 2.5 கி.மீ இல் மூனாறு தலைப்பு என்ற இடத்தில் வெண்ணாறு, பாமினி ஆறு, கோரையாறு ஆகிய மூன்று ஆறுகள் பிரிகின்றன.

இதில் கோரையாறு என்கிற ஆறு எங்களுக்கானது. நீடாமங்கலத்தில் தொடங்கும் கோரையாறு முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் அருகே வங்க கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 80 கி.மீ ஆகும். இந்த ஆறு நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களில் உழவு தொழில் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

முத்துப்பேட்டை அருகில் உள்ள தேவதானம் என்ற கிராமத்தில் கோரையாற்றிலிருந்து கிழக்கு நோக்கி தூக்கனாங்குருவி என்கிற சிறிய ஆறு பிரிகிறது. அந்த தூக்கனாங்குருவி ஆறு காரைக்காரன்வெளி கிராமம் அருகே ஆரியலூர், வடசங்கந்தி என இரண்டு கிராமங்களுக்கு பெரிய வாய்க்காலாக பிரிந்து செல்கிறது. அதில் பெரிய வாய்க்கால் எனப்படும் அகலமுள்ள வாய்க்காலில் எங்கள் வடசங்கந்தி கிராமத்திற்கு தண்ணீர் வரும்.

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வந்து சேரும் போது, எங்கள் கிராமத்திற்கு அந்த ‘வாசம்’ வந்துவிடும். குப்பை அடிப்பது, குப்பைகளை கொழுத்தி விடுவது, மீ முள் செத்துவது, வயலில் கிடக்கும் மரங்களை திடலில் போடுவது என விவசாய வேலைகள் றெக்கை கட்டி பறக்கும்.

பெரிய வாய்க்காலுக்கு புதிய தண்ணீர் வரும் போது, அதை காண ஊர் மக்கள் திரண்டு செல்வார்கள். தண்ணீரை கும்பிட்டு வணங்கி வரவேற்பார்கள். நுங்கும் நுரையுமாக வெடுப்புகளில் புகுந்து அதை நிறைத்துக் கொண்டு வேகமாக முன்னேறி செல்லும் அந்த ‘புதிய தண்ணீர்’.

வெடுப்புகளில் வாழ்ந்த பூரான், தேளு போன்ற புழு பூச்சிகள் எல்லாம் எங்கு செல்வது என்று தெரியாமல் பீதியில் பயந்து அங்கும் இங்குமாக இடம் தேட ஓடும்.  

ஆறு மாதங்கள் காய்ந்து கிடந்த வாய்க்கால்கள் நீர் நிரம்பி தழும்பி கிடப்பதைப் பார்க்கும் போது மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இரவெல்லாம் தவளைகள் விடாமல் கத்தும். அதுவும் ஒரு ராகத்தோடு!

நாற்றாங்காலுக்கு தண்ணீர் வைத்து ஏர் உழுவார்கள். நிலத்தை மண்வெட்டியால் கொத்தி சமப்படுத்துவார்கள். நல்ல நாள் பார்த்து ‘சேரை’ பிரித்து ‘விதை கோட்டை’களை வெளியே எடுப்பார்கள். அவற்றை தூக்கிச்சென்று வாய்க்காலில் தள்ளி ஊற வைப்பார்கள். தண்ணீர் இழுத்து செல்லாமல் இருக்க பாதுகாப்பாக கட்டி வைப்பார்கள்.

விதைக் கோட்டை ஒரு நாள் முழுதும் தண்ணீரில் கிடக்கும். மறு நாள் கரையில் ஏற்றி தண்ணீரை வடிய விடுவார்கள். மூன்றாம் நாள் பிரிக்கும் போது முளைவிட தயார் என்கிற நிலையில் இருக்கும். அதை நாற்றங்காலில் தெளித்து, தண்ணீர் வடிய வைப்பார்கள். மூன்றாம் நாள் பச்சை பச்சையாக வயல் முழுவதும் காட்சியளிக்கும். அதை பார்க்கும் போது பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.

நான் வயசுக்கு வந்துட்டேன். கல்யாணத்துக்கு ரெடி என்று கூறுவார்களே, அதைப் போல நாற்றாங்காலில் பசுமையாக மண்டிக் கிடக்கும் நாற்றுகள் நடவு வயலுக்கு செல்ல தயார் என்கிற நிலையை அறிவிக்கும் போது, இந்த ‘பதினெட்டாம் பேரு’ வரும்.

உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி சொல்லி பொங்கல் விழா கொண்டாடும் விவசாயிகள், தண்ணீருக்கும் நன்றி சொல்லி வேண்டிக் கொள்ளும் விழாவாக பதினெட்டாம் பேரை கடைப்பிடித்தார்கள்.

நாட்டை தாய்நாடு என்று சொல்வது போல, ஆற்றை கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்களாம். அதனால்தான் கன்னிப் பெண்கள் கூடி இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.  

புது நீர் வரும்போது கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வது. சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது, தாலியை மாற்றிக் கொள்ளுதல் என சில வழிபாடுகள் செய்கின்றனர். இதில் வற்றாமல் தண்ணீர் வர வேண்டும் என்கிற வேண்டுதலும் முக்கியமாக இருக்கிறது.

இந்த விழாவை கொண்டாட முதல் நாளே ஸ்பெஷலாக தண்ணீர் திறந்து விடுவார்கள். பொங்கி வரும் தண்ணீர் வாய்க்காலின் இரு கரைகளையும் இணைத்துக் கொண்டு பாயும். வெள்ள பெருக்கெடுத்து ஓடும் அந்த தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடுவது எல்லையில்லா மகிழ்ச்சியை தரும்!.

அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க, மாலை நான்கு மணிக்கு விழா என்றாலும், நாங்கள் மூன்று மணிக்கே சென்று விடுவோம். வாய்க்காலின் வடக்கு கரையில் உள்ள பூவரச மரத்தில் ஏறி வாய்க்காலின் பக்கம் நீளும் கிளைகளுக்கு தாவி சென்று கிளையிலிருந்து வாய்க்காலுக்குள் ‘தொபுக்கடீர்’ என்று குதிப்போம்.  ஒருத்தர் மேல் ஒருத்தர் குதித்து விழுவதும், ஓடி வந்து முந்திக் கொண்டு மரம் ஏறுவதும், வழுக்கி விழுவதும், மோதிக் கொள்வதும், எதிர் நீச்சல் போட்டு அடித்துக் கொள்வதும் என சுகமான விளையாட்டுகள் அங்கு நடைபெறும். .

சிலர் பாலத்தின் மேலிருந்து குத்தித்து பாலத்தின் உள்ளே சென்று வெளியில் வருவார்கள். தம் கட்டி மூச்சு பிடிப்பவர்கள்தான் அப்படி செய்ய முடியும். சாகசங்கள் நிறைந்த அந்த விளையாட்டுக்களும் அங்கு நடைபெறும்.

சரியாக மாலை நான்கு மணிக்கு பெண்கள் கூடி விடுவார்கள். பூஜை செய்ய மேற்கு பகுதியில் உள்ள ‘தச்சன்தரிசி’ என்கிற இடத்தில் வாய்க்காலின் பாலம் அருகே கிழக்கு பார்த்து வீடு கட்டுவார்கள். அதவாது அஞ்சுக்கு அஞ்சு அளவில் கட்டமாக வீடு அமையும். அதில் உள்ள நான்கு மூளைக்கும் ஒரு வட்டம் அமைத்து அதில் வேப்பில்லை, கருகமணி போன்ற பொருட்களை வைப்பார்கள்.

உள் பக்கம் சுத்தம் செய்து பசு சாணத்தால் மொழுகி கோலம் போடுவார்கள். அதன் மேல் வாழை இலையை விரித்து அதில் அகல் விளக்கு வைப்பார்கள். வெற்றிலை, பாக்கு, சூடம், சாம்பிராணி, பழங்கள் என்று பூஜைக்கு வேண்டிய பொருட்களுடன், வெல்லம் கலந்த பச்சரிசி வைத்து வழிபடுவார்கள்.

மஞ்சள் தடவிய நூலை பெண்களுக்கு கழுத்திலும், சிறுவர்களுக்கு கையிலும் கட்டிவிட்டுவார்கள். அந்த ஆண்டு திருமணம் ஆன மணமக்கள் அங்கு புத்தாடையுடன் வந்திருந்து வணங்கி, திருமணத்து அன்று அவர்கள் அணிந்திருந்த மாலைகளை இருவரும் சேர்ந்து வாய்க்காலில் விடுவார்கள்.  அது பாய்ந்து செல்வதை கண்டு களிப்பர்.

எல்லோருக்கும் இனிப்பு கலந்த அரிசி போட்டி போட்டு வழங்குவார்கள். தனியாக வீட்டில் செய்து கொண்டு வந்த உணவுகளை பகிர்ந்து கொடுப்பார்கள்.

அப்பொழுதெல்லாம் பருவ மழை மிகச் சரியாகப் பொழிந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப அந்த நேரத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆணி இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய காய்ச்சல் முடிந்து, ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து.

புதிதாக வரும் தண்ணீர் தெய்வம். அதனால், அதை வணங்க வேண்டும். இரண்டாவது வரும் தண்ணீரில் குளிக்க வேண்டும் என்பார்கள்.

ஆடியில் வருவது புதுவெள்ளம், அது ஐப்பசி வரை குறுவை சாகுபடிக்கு உதவும். ஐப்பசியில் வரும் வெள்ளம் ஆபத்தானது என்பார்கள்.

இப்போது ஆடியில் தண்ணீர் வருவதும் இல்லை. ஐப்பசியில் அறுவடையும் இல்லை. இரண்டு போகம் சாகுபடி ஒரு போகம் என சுருங்கி போனது. ‘சேர்’ என்றால் என்ன? ‘கோட்டை’ என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு அடுத்த தலைமுறை மாறி விட்டது?.

அதே போல கன்னிப் பெண்கள் விழாவும், வேடிக்கையும் தண்ணீர் வராமல், குளத்திற்கு, அல்லது தங்கள் வீட்டுக்குள் வணங்குகிற அளவுக்கு சென்றுவிட்டது?.

பாலத்துக்கு அருகே இருந்த பூவரசு மரங்களும் இப்போது அங்கு காணவில்லை. செங்கல் சூளைக்குள் வெந்துவிட்டதாக சொன்னார்கள்.  
பெரியவர்கள் சொல்வது போல, “அதெல்லாம் ஒரு காலம்” என்று அன்றைய நிகழ்வுகள் நெஞ்சுக்குள் பசுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நினைவுகள் இந்த ஆடி பெருக்கு நாளில் நினைவுக்கு வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
-    ஜி.பாலன்





Friday, August 4, 2017

14. வீரமாகாளி அம்மான் கோவில் திருவிழா.

வடசங்கந்தி கிராமத்தின் கிழக்கே மாரியம்மன் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், வயல் காட்டில் அமைந்துள்ளது வீரமாகாளி அம்மன் கோவில். 

வடக்கு பார்த்து வீரமாகாளி அம்மன் கோவில், அதன் அருகில் கிழக்கு பார்த்து வீரன் கோவில், தூரத்தில் குளக்கரை ஓரம் தெற்கு பார்த்து சாம்பான் சிலை. 

வீரமாகாளி அம்மனுக்கு நிறைய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களை அரசு அங்குள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு கொடுத்து, ‘மா’வுக்கு நாலு கலம்(அரை மூட்டை, அல்லது பனிரெண்டு மரக்கால்) நெல் அளந்தார்கள். 

ஆடி மாதத்தில் விதை விதைத்து, தை மாதத்தில் அறுவடை என்று எப்பவும் வெள்ளாமை, விவசாயம் என்று விவசாயிகள் வயலுடன் சேர்ந்து வாழ்வார்கள். 

உழைத்து களைத்தவர்கள், கலைகள் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். அதற்கு கோவில் திருவிழா பெரும் வாய்ப்பாக அமையும்.

திருவிழாவிற்கு எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுவார்கள். மறு நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு, தினமும் இரவு தெருவுக்கு அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவார். ஒவ்வொரு வீட்டிலும் காத்திருந்து, பூ, பழம் வைத்து, தேங்காய் உடைத்து வணங்குவார்கள். 

வடக்கு தெருவில் கடைசி வீட்டில் ஆரம்பித்து, மேலத்தெரு, கீழத்தெரு, மரத்தெரு என எல்லா இடங்களுக்கு செல்லும் அம்மன் உலா, பொழுது விடியும் போது, கோவிலை சென்றடையும். 

அங்கு வழிபாடுகள் முடிந்த பிறகு, பிரசாதம் வழங்குவார்கள். அது இரண்டு கைகளாலும் பிடிக்க கூடிய அளவுக்கு பெரிதாக இருக்கும். அதை கடித்து, கடித்து திண்பவர்களை பார்க்கும் போது அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும். 

கோவிலுக்கு ஆண்களும், சிறுவர், சிறுமிகளும் மட்டுமே வருவார்கள். பெண்கள் வந்ததில்லை. பெண்கள் தெருவுடன் இருந்து விடுவார்கள். அதே போல தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கும் சென்றதில்லை. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாண்டகபடி காரர்கள் போட்டி போட்டு செய்வார்கள். முதல் மண்டகப்படி ராமசந்திர ராஜுவின் மகன் சுந்தர்ராஜு, இரண்டாவது மண்டகப்படி சீனிவாசராஜுவின் மகன் முத்தழகிரி ராஜு, மூன்றாவது மண்டகப்படி மாணிக்கம் பிள்ளை வகையறா, நான்காவது மண்டகப்படி உலகநாதன் வகையறா, ஐந்தாவது மண்டகப்படி மரத்தெரு காத்தமுத்து, வீரையன் வகையறா என ஒவ்வொரு குழும் பெரிய அளவில் செலவு செய்து கொண்டாடுவார்கள். 

ஒவ்வொரு நாள் இரவிலும் அவரவர் குழு பொருளாதாரத்திற்கு ஏற்ப, பாட்டு கச்சேரி, கரகாட்டம் என தூள் கிளப்புவார்கள். 

கடைசி நாள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடும் நாள். 

அன்று பகலில் அம்மன் வீதி உலா வருவார். பிரமிக்கிற வகையில் மலர்களால் ஜோடித்து, பொன் நகைகள் பூட்டி அழைத்து செல்வார்கள். ஆரம்பத்தில் ஆரியலூர் கிராம மக்கள் வழிபட வசதியாக அழைத்து செல்வார்கள். 

அங்கிருந்து வடசங்கந்தி கிராம விவசாய சாகுபடிக்கு வாய்க்கால் பிரிந்து, அதிலிருந்து தண்ணீர் வருவதால், அதை அம்மன் பிறந்த இடமாக குறிப்பிடுவார்கள். பிறகு வடக்கு தெரு, மேலத்தெரு, கீழத்தெரு, மரத்தெரு, குமாரபுரம் மக்கள் வழிபடுவதற்காக அந்த ஊர் எல்லை வரை கொண்டு செல்வார்கள். 

அன்று வீட்டுக்கு வீடு கொண்டாட்டமாக இருக்கும். உறவினர்கள் தங்களுடைய உறவு முறையுள்ள வயதொத்த மாமன் மகன்கள், அத்தை மகன்கள் மீது மஞ்சள் தண்ணி ஊற்றி விளையாடுவார்கள். அது பார்க்க வேடிக்கையாக இருக்கும். 

அண்டா நிறைய நிறைந்து இருந்த மஞ்சள் தண்ணீர் காலியாகும் போது, அவர்கள் மனம் பூரிப்பில் இருக்கும். அதை அம்மன் பார்த்துக் மகிழ்வதாக கருதினார்கள். 

வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழா முடிந்த பிறகு காப்பு விளக்கி, அதன் தொடர்சியாக மாரியம்மன் கோவிலில் விழா நடைபெறும். பகலில் காஞ்சி காய்ச்சி வழங்குவார்கள். அதற்காக பிரத்யேகமாக பனை ஓலையில் பாத்திரம் மடித்து அதில் ஊற்றுவார்கள். 

கிராமத்தில் வாழும் அத்தனை பேரும் கஞ்சி குடிக்க ஆர்வம் காட்டுவார்கள். அதை நோய் தீர்க்கும் மருந்தாக நினைத்தார்கள். அம்மன் குறை ஆகிவிடும் என்று நேரில் வந்து குடிப்பார்கள். வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு வாளிகளில் கஞ்சி எடுத்து செல்வார்கள். 

தொடர்ந்து மூன்று நாள் இரவு, புதுக்கோட்டை முஸ்தபா குழுவினரின் நாடகம் நடைபெறும். முதல் நாள் வள்ளி திருமணம், இரண்டாவது நாள் பவளக்கொடி, மூன்றாவது நாள் அரிச்சந்திர மயான கண்டம் ஆகிய நாடகங்கள் நடைபெறும். நம்பி வரும் கலைஞர்களை விருந்து வைத்து கௌரவிப்பார்கள். 

கோவில் திருவிழாவை முன்னிட்டு வண்ண பலூன்கள், கருப்பு கண்ணாடி, கடிகாரம், புல்லாங்குழல், பீப்பி என பல விளையாட்டு பொருட்களும், சவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய் என பல திண்பண்டங்களும் விற்பனை செய்வார்கள். 

கோவில் திருவிழாவை நம்பி வரும் சிறு வியாபாரிகள் பலன் அடைய வேண்டும் என்றும், குழந்தைகள் கொண்டாட வேண்டும் என்றும் பொருட்களை போட்டி போட்டு வசதிக்கேற்ப வாங்குவார்கள். 

குலுக்கல் கொட்டை கடை, சீட்டு விளையாட்டு என்று ஒரு பக்கம் சிலர் பணத்தை விரயம் செய்து மகிழ்ச்சி அடைவார்கள். 

திமிறிக் கொண்டு ஓடும் பிள்ளைகளை, கை பிடித்து பத்திரமாக அழைத்து செல்லும் தாய், தங்கைகளின் பாசத்தின் வெளிப்பாடுகளை அங்கு நிறைய பார்க்கலாம். அந்த அனுபவங்களை அடுக்கி சொல்லிக் கொண்டே போகலாம். 

கோவில் திருவிழாவை சிறப்பாக செய்து முடிக்க காரணமாக இருந்த மண்டகப்படி காரர்களை, மாலை அணிவித்து மேள தாளத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்து கௌரவிப்பார்கள். 

இப்போதெல்லாம், வண்டி வைத்து ஜெனெரட்டார் வசதியுடன் அம்மனை கொண்டு வருவதை பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்தில் தலையில் தூக்கி வந்திருக்கிறார்கள். அப்படி தலையில் சுமந்து வந்தவர்களில் என்னுடைய தந்தையும் ஒருவராக இருந்திருக்கிறார்.

13. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட என்னுடைய தந்தை.

VADASANGANTHI VINAYAGAR
சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என் தந்தை.

தகடூர் கிராமத்தில் அமைந்துள்ள வைரவர், குல தெய்வம். அங்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வணங்கி வருபவர், மாதத்திற்கு ஒரு முறை எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்று வணங்குவார்.

எட்டுக்குடி முருகன் மீது உள்ள பக்தியால் என்னுடை அண்ணனுக்கு சண்முகசுந்தரம், எனக்கு பாலசுப்பிரமணியன், தம்பிக்கு நமசிவாயம், அக்காள் மகனுக்கு குமரவேலன் என் பெயர் வைத்தார்.

வடசங்கந்தி கிராமத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன், வீரமாகாளியம்மன், ஆகிய கடவுளர்களிடம் உரிமையுடன் பேசுவார் பழகுவார். அவர்கள் மீது நம்பிக்கை அதிகம்.

அவர் உயிரோடு இருந்தவரை சிவன் கோவிலில் இருக்கும் முருகனுக்கு கார்த்திகை திருநாளில் அர்சனைக்கும், அபிஷேகத்திற்கு கொடுப்பார்.
குளத்தில் குளித்துவிட்டு வரும் போதே வெள்ளந்தாங்கி விநாயகரை வணங்குவார்.

கோவில் திருவிழா என்றால், சிவன்ராத்திரி அன்று மாரியம்மன் கோவிலுக்கு, விநாயகர் கோவிலில் இருந்து கரகம் எடுத்து செல்வது வழக்கம்.

அன்று கிராமமே பக்தியோடு திரண்டு நிற்கும், வடசங்கந்தி கிராமத்தில் வசித்து வெளி ஊரில் இருப்பவர்கள், வடசங்கந்தி கிராமத்தில் பெண் கொடுத்தவர்கள், பெண் எடுத்தவர்கள் என பல விருந்தினர் அந்த விழாவில் பங்கேற்பார்கள்.

THAKATUR BAIRAVAR
இரவு ஒன்பது மணிக்கு விநாயகர் கோவில் வாசலில் அமர்ந்து கரகம் ஜோடிப்பார்கள். என்னுடைய தந்தைக்கு சாமி அருள் வரவழைத்து, அவர் குரல் கொடுத்த பிறகு, என்னுடைய அத்தை மகன் ஜானகிராமனுக்கு சாமி வரும்.
அவர் அருள் வந்து ஆடுவார். அவரை பிடித்து மடக்கி, அவருக்கு சாமி உடை அணிந்து மாலைகள் அணிவிப்பார்கள். என் தந்தை கரகத்தை தூக்கி அவர் தலை மீது வைப்பார்.

கரகத்திற்கு முன்பு பறையடித்தபடி சிலர் நடப்பார்கள். கரகத்திற்கு வழி அமைத்து கொடுத்து அழைத்து செல்வது போல, வடிவேலு சாம்பான் கடவுளாக மாறி சாம்பலை அள்ளி உடல் முழுவதும் பூசிக் கொண்டு அருள் வந்து பெரும் குரல் கொடுத்தபடி ஆடி செல்வார்.

ஒவ்வொரு வீட்டு வாசலும் கூட்டி பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

கரகம் தூக்கி வரும் ஜானகிராமன், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்பார். அவருடைய கால்களில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி நமஸ்கரித்து குடும்பத்துடன் வணங்குவார்கள்.

கரகத்தின் பின்பு பக்தி பரவசத்துடன் ஆண்களும், மாவிளக்கு சுமந்து பெண்களும் திரளாக நடந்து செல்வார்கள்.

மேலத்தெரு விநாயகர் கோவிலில் இருந்து புறப்படும் கிரகம், கீழத்தெரு மாரியம்மன் கோவில் சென்று அடையும் போது நாடு இரவு முடிந்துவிடும்.
கோவிலை மூன்று முறை சுற்றி வந்து ஜானகிராமனும் அவரை தொடர்ந்து வந்த கூட்டமும் நிற்க, கிரகத்தை என் தந்தை இறக்கி வைப்பார். கிரகம் இறக்கிய பிறகு, அருள் கொண்டு வானை பிளக்கும் அளவுக்கு பெரும் குரல் கொடுத்து ஓய்வார் ஜானகிராமன். அல்லது மலை ஏறுவார்.

EDDUKKUDI MURUGAN KOVIL
கிழக்கு பார்த்த மாரியம்மன் வாசலில் இருந்து, கோவில் காலை புதைக்கப்பட்ட இடம் வரை, இரு பக்கமும் மாவிளக்கு வைத்து அதில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள் பெண்கள்.

கண் நோய், காது நோய், இதய நோய், கால்வலி, கை வலி, வயிற்று வலி என நோய்கள் சரியாக வேண்டும் என வேண்டிக் கொண்டவர்கள், குளித்து ஈரத்துணியுடன் படுத்திருக்க, வேண்டிக் கொண்ட இடத்தில் வாழை இலையில் மாவிளக்கு வைத்து பிடித்துக் கொள்வார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு, மாரியம்மன் நினைவாக மாரியம்மாள், மாரியப்பன் என்று பெயர் வைப்பார்கள். சிலர் முடி எடுத்து வணங்குவார்கள்.
இப்படி விடிய விடிய நடைபெறும் அந்த விழாவில் முன்னின்று செய்யும் முக்கிய மனிதர்களில் ஒருவராக இருப்பார் என் தந்தை.

மாரியம்மனுக்கு, ஆகாச மாரியம்மன் என்று பெயர். மாரி என்றால் மழை. அதுவும் ஆகாசத்தில் இருந்து கொட்டும் மழை. அந்த மழை கிராம மக்களின் வாழ்வுக்கும், விவசாயத்திற்கும் பெரும் உதவியாக இருந்தது. அதனால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழாவை பயன்படுத்திக் கொள்வார்கள்.

அங்குள்ள மண்ணை பிசைந்து உருட்டி அதன் மீது வேப்பிள்ளையை சொருகி, அதைத்தான் வணங்குவார்கள். முன்னோர்கள் இயற்கையை வழிப்பட்டார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார் மாரியம்மன்.

Sunday, July 30, 2017

12. கௌசல்யாவிடம் மன்னிப்பு கேட்ட என் தந்தை

வேப்பஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வங்கவனம். அவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால், இரண்டாவதாக என்னுடைய அம்மாவின் சித்திகளில் ஒருவரான ஜானகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
வங்கவனத்தின் முதல் மனைவிக்கு பிறந்தவர் காமாட்சி. தாய், தந்தை இல்லாமல் தான் வளர்வதை போல, தாயில்லாமல் வளரும் காமாட்சி மீது, என்னுடை அம்மாவுக்கு பரிவும், பாசமும் அதிகம்.
சிறு வயதிலிருந்தே தங்கையாக, தோழியாக இருந்த காமாட்சி, பெரியவள் ஆனதும், தனது, கணவரின் தம்பி அரிகிருஷ்ணனுக்கு மணமுடிக்க விரும்பினார். இதை ஆலோசனையாக என்னுடைய தந்தையிடம் தெரிவித்த போது, அவரும் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், எங்கள் ஊரில் வசித்த என்னுடைய அம்மாவின் சித்திகளில் ஒருவரான, வள்ளியம்மையின் மகள் மருதம்பாள் என்பவரை, என்னுடைய சித்தப்பா திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
இந்த தகவலை தனது அண்ணனிடம் சொல்ல தயங்கிய என் சித்தப்பா, அவருடைய சித்தியை திருமணம் செய்து கொண்ட, மாரிநகரி ராமநாதன் என்பவரிடம் சென்று தெரிவித்திருக்கிறார்.
எங்களில் மூத்தவர் ராமநாதன். அவருடைய வார்த்தைக்கு என்னுடைய தந்தை மதிப்பளிப்பார் என்பது ஒன்று. இரண்டாவது, ராமாநாதனிடம் மனியம் வேலை பார்ப்பவர் வடிவேலு. அவருடைய மகள்தான் மருதாம்பாள்.
முதலில் வடிவேலுவிடம் இது குறித்து ஆலோசனை செய்திருக்கிறார் ராமநாதன். அண்ணனை சார்ந்து இருக்கும் அவரை நம்பி எப்படி பெண் கொடுப்பது என்று தயங்கி இருக்கிறார் வடிவேலு.
பிறகு, இருக்க இடமும், சாகுபடி செய்து கொள்ள மூன்று மா நிலமும் அவன் பெயரில் எழுதி வைக்கிறேன் என்று கூறி, அவரை சம்மதிக்க வைத்திருக்கிறார் ராமநாதன்.
பிறகு என்னுடைய தந்தையை அழைத்து விபரத்தை கூறியதும், அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. தான் ஒரு முடிவு செய்தால், தம்பி ஒரு முடிவு எடுத்திருக்கிறானே என்று ஆத்திரம் தலைக்கு ஏறியது. இருப்பினும் குடும்பத்தில் மூத்தவர் ராமநாதான் முடிவு செய்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத என்னுடைய தந்தை, உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
சித்தப்பா அவர் விரும்பிய மருதம்பாளை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கு என் தந்தை செல்லவில்லை. மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை என் தந்தையால் நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் அதற்கு காரணமாக இருந்தது.
ஆத்திரத்தில் அப்போது அவர் எடுத்த அந்த முடிவு, அவரை பலமுறை வருத்தமடைய வைத்திருக்கிறது. தாயாகவும், தந்தையாகவும் நின்று செய்ய வேண்டிய பொறுப்பை, ராமநாதன் இருக்கிறாரே என்று கண்டு கொள்ளாமல் விட்டது, எவ்வளவு பெரிய குறை என்று வேதனைப் பட்டிருக்கிறார்.
அந்த குறையை எப்போது போக்கிக் கொள்வது என்று காத்திருந்தவருக்கு மறு வருடமே அதற்கு பலன் கிடைத்தது. ஆம், என் சித்தப்பாவுக்கு கௌசல்யா என்கிற அழகான பெண் குழந்தை பிறந்தார். அந்த குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தவர், அதன் பிஞ்சு கால்களால் தன்னை மன்னிக்கும் படி மூளையை நோக்கி உதைக்க வைத்திருக்கிறார்.
குழந்தையும், தெய்வமும் ஒன்று என்று நம்பியவர் அவர். அந்த தெய்வம் மன்னித்ததாக நினைத்துக் கொண்டார் அவர்.

11. என் தந்தையின் மனதுக்குள் புதைந்த அந்த நினைவுகள்

என் தந்தையை திருமணம் செய்து கொண்டு வடசங்கந்தி கிராமத்திற்கு வந்தார் என் அம்மா.
ஐயன்குளத்தின் தென் மேற்கே, நான்கு பக்கமும் வயல்கள் சூழ்ந்திருக்க, நடுவே அமைந்துள்ள ஒரு பெரிய திடல். அங்கு தனித்திருக்கும் ஒரு பெரிய வீடு. அந்த ஒத்த வீட்டில் படுக்கையில் கிடந்த மாமனார் நடேசன், வைரத்தின் மகன்கள் கோவிந்தராஜ், செல்லப்பா, கொழுந்தன் அரிகிருஷ்ணன் என்று, ஒரு பெரும் கூட்டம் இருந்தது.
ஐயன்குளத்திற்கு வடக்கு பக்கம் உள்ள தெருவில் கணவரின் சித்தப்பா மகன்கள் வைரப்பன், அரிகிருஷ்ணன் இருவரின் குடும்பங்களும், அதன் பக்கத்தில் கணவரின் தாத்தா, சொக்கப்பனின் கொழுந்தியாள் மகன்கள் என ஒரு பெரும் கூட்டம் தெருவை அடைத்து தனிதனியாக இருந்தார்கள்.
மாரிநகரி கிராமத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு மாரிநகரியிலும், வடசங்கந்தியிலும் மாறி மாறி வசித்து வந்தார் சின்ன மாமியார் மீனாட்சி சுந்தரம். பெரும் நிலக்கிழரான அவரிடம் மனியம் பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு, நாளடைவில் ஒதியடிக்காடு கிராமத்தில் வசித்த தன் குடும்பத்தையும் வடசங்கந்தி கிராமத்திற்கே அழைத்து வந்தார்.
வடிவேலுவின் மனைவி வள்ளியம்மை, என்னுடைய அம்மாவின் பெரிய சித்தி. அவருக்கு வைத்தியலிங்கம், பக்கிரிசாமி, சுப்பிரமணியன் என மூன்று மகன்களும், மருதாம்பாள் என்கிற ஒரு மகளும் இருந்தார்கள்.
புதிய கிராமம், புதிய மனிதர்கள் என எல்லோரும் புதியவர்களாக இருந்தாலும், அங்கு சித்தி வள்ளியம்மையும், தங்கை, தம்பிகள் இருந்ததும் அம்மாவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
எதிர்ப்பார்த்த மாதிரி யாருக்கும் வாழ்க்கை அமைவதில்லை. கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து செல்கிறோம். தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பொன்னும், பொருளும் இருந்தாலும், காலம் அந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில்லை.
அப்படித்தான் என் தந்தைக்கும் காலம் வேடிக்கை காட்டியது. தனது அத்தை மகள் செண்பகத்தை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார், என் தந்தை. தனக்கு குழந்தை பிறக்கவில்லை என்று, தனது கணவர் அருணாசலத்துக்கு தங்கை செண்பகத்தையும் திருமணம் செய்து கொண்டார் முல்லையம்பாள். அதனால், அப்பா ஆசைப்பட்டது அவரது மனதுக்குள்ளேயே புதைந்து போனது.
செண்பகம் இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கிட்டதட்ட ஒரு சன்னியாசியாகவே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். நாம் நினைப்பது போல எல்லாம் அமைவதில்லையே.
அவரது அந்த விரதத்தையும் உடைத்திருக்கிறது, அவரது சின்ன அக்காள் விசாலாட்சியின் பாசம். முப்பத்தி ஐந்து வயது வரை சன்னியாசி போல காலத்தை கடத்தியவர், அக்காவின் பாசத்திற்கு முன்பு தோற்றுப் போனார்.
பெரிய அக்கா மகன்கள் தம்முடன் இருப்பதால், தனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதக்காம மறுத்தவரை, பாசத்தால் அதட்டி, மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார், விசாலாட்சி.
அக்கா விசாலாட்சியின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து திருமணத்திற்கு சம்மதித்தார் என்னுடைய தந்தை. என் அம்மா அவருக்கு மனைவியாக கிடைத்தார்.

10. என் தந்தைக்கு பெண் பார்த்த அத்தை

உதயமார்தாண்டபுரம் கிராமத்தில் வசித்த வேம்பையன் என்பவருக்கு பக்கிரிசாமி, மாரிமுத்து என இருமகன்கள்.

பக்கிரிசாமியின் முதல் மனைவி திடீர் என்று காலமானதால், அவரது மகன் கோவிந்தசாமி, மகள் மீனாட்சியை வளர்க்க என்னுடைய அம்மாவின் அம்மா, அதாவது என் ஆத்தாள் வைரக்கண்ணுவை திருமணம் செய்து கொண்டார் பக்கிரிசாமி.

கோவிந்தசாமியையும், மீனாட்சியையும் தான் பிள்ளைகள் போல வளர்த்த வைரக்கண்ணுவுக்கு, சர்க்கரை என்கிற மகனையும், நாகரத்தினம் என்கிற மகளையும் பரிசாக தந்தார் பக்கிரிசாமி.

ஆனால், நான்கு குழந்தைகளும் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்க்க இவருக்கும் கொடுப்பனை இல்லை. திடீர் என ஒரு நாள் வைரக்கண்ணுவும் இறந்துவிட அதிர்ந்து போனார் பக்கிரிசாமி.

இரண்டு மனைவி வந்தும் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார். அப்போதெல்லாம் பல தாரா திருமணங்கள் இருந்த காலம். ஆனால், மூன்றாவதாக வாழ்க்கை அமைத்துக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. இரண்டு மனைவிகள் மீதும் கொண்ட அவரது பாசம் அதனை தடுத்தது. அதனால், அவர்களை நினைத்து வாழ்ந்தவர், திடீர் என ஒரு நாள் அவரும் அவர்களிடம் போய் சேர்ந்தார்.

பக்கிரிசாமியின் முதல் மனைவிக்கு பிறந்த கோவிந்தசாமி, மீனாட்சி, இரண்டாவது மனைவி வைரக்கண்ணுவுக்கு பிறந்த சர்க்கரை, நாகரத்தினம் ஆகியோர் சிறுவயதிலே பெற்றோரை இழந்து நின்றனர்.

தங்கையின் மக்கள் அனாதைகளாக இருப்பதாக கருதிய வைரக்கண்ணுவின் சகோதரி முத்துலட்சுமி, தன்னுடன் நால்வரையும் அழைத்து செல்ல விரும்பினார். அதற்கு பக்கிரிசாமியின் சகோதரர் மாரிமுத்து சம்மதம் தெரிவிக்கவில்லை. தனது மகன் ராமசாமி மீது காட்டும் பாசத்திற்கு குறைவில்லாமல் அவர்களிடமும் பாசத்துடன் இருப்பேன் என்று உறுதி கூறினார்.

அவருடைய பாசத்துக்கு முன்னாள் தோற்று போன முத்துலட்சுமி, கடைக்குட்டி நாகரத்தினம் ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கிறாள். அவளை மட்டுமாவது என்னுடன் அனுப்பி வைய்யுங்கள் என்று பிடிவாதம் பிடித்தார். ஒரு வழியாக அவரை வேப்பஞ்சேரி அழைத்து செல்ல அனுமதி அளித்தார் மாரிமுத்து.

நாகரத்தினம் சிறு வயதிலேயே அழகாக இருப்பார். பார்க்க ஐயர் வீட்டு பெண் மாதிரி இருக்கிறார் என்பதால், அவரை எல்லோரும் பாப்பாத்தி என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது.

தாய் வழியில் நாகரத்தினத்திற்கு, முத்துலட்சுமி என்கிற பெரியம்மாள், வள்ளியம்மாள், பொன்னம்மாள், ஜானகியம்மாள், செல்லம்மாள் என நான்கு சித்திகள், வைத்தியலிங்கம் என்கிற மாமா இருந்தனர். இவர்கள் எல்லாம் வாய்மேடு மாணிக்கத்தின் வாரிசுகள்.

பெரியம்மாள் முத்துலட்சுமியின் மகன் சுப்பிரமணியன், மகள் முல்லையம்பாள், சித்திகள் வள்ளியம்மாள், பொன்னம்மாள், ஜானகியம்மாள், செல்லம்மாள் ஆகியோருடன் வளர்ந்தார் பாப்பாத்தி என்கிற நாகரத்தினம்.

சகோதர்கள், சகோதரியை பார்க்க அவ்வப்போது தனது உதயமார்தாண்டபுரம் கிராமத்திற்கு செல்வார் பாப்பாத்தி. காலம் உருண்டது. சிரியவர்கள் பெரியவர்கள் ஆனார்கள்.

சகோதரி மீனாட்சியை மேலப்பெருமழை காசிநாதான் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு வேதவள்ளி, பாஞ்சாலி என இரண்டு மகளும், அய்யம்பெருமாள், மாரிமுத்து, துரைராஜ் என மூன்று மகன்களும் பிறந்தனர்.

தில்லைவிளாகம் சாரதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கோவிந்தசாமி. இவர்களுக்கு கமலா, அமுதா என இரு மகள்களும், மணியன், மாரிமுத்து, ராஜேந்திரன் என மூன்று மகன்களும் பிறந்தனர்.

சர்க்கரை, தனது சகோதரர் கோவிந்தசாமி, முதல் பங்காளி ராமசாமி, இரண்டாம் பங்காளி சுப்பையாவின் மகன் வேம்பையன் ஆகிய மூவர் வீட்டிலும் செல்லமாக வளர்ந்தார். இதில் வேம்பையன் உதயமார்தாண்டபுரம் கிராமத்தின் தலைவராக இருந்தார்.

தங்களை பார்க்க வரும் சகோதரி பாப்பாத்தியை அதே ஊரில் வசித்த உறவினர் ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால், பாப்பாத்தியின் பெரியம்மாள் முத்துலட்சுமி அதற்கு உடன்படவில்லை.

இந்த தகவல் அதே ஊரில் வசித்த என்னுடைய அத்தை விசாலாட்சிக்கு தெரிய வந்தது. பாப்பாத்தி சின்ன பெண். இவளைப் போய் வயதான அவருக்கு எப்படி திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தீர்கள் என்று வருத்தப்பட்டவர், பிறகு என்னுடைய தம்பிக்கு திருமணம் செய்து தருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

இது பாப்பாத்தியின் பெரியம்மாளுக்கு பிடித்துவிட்டது. அதன் பிறகு என்னுடைய தந்தை கோபாலகிருஷ்ணனுக்கு பாப்பாத்தியை திருமணம் செய்து வைத்தனர்.

உதயமார்தாண்டபுரத்தில் பிறந்து, வேப்பஞ்சேரியில் வளர்ந்து, வடசங்கந்தி கிராமத்திற்கு மருமகளாக வந்தார் என்னுடைய தாய்.

9. அப்பா எடுத்த சபதம்

என் தந்தையினுடைய தங்கை பெயர் செல்வரங்கம். பெயரைப் போலவே செல்லம். கடைக்குட்டி என்பதால் செல்லமாக வளர்ந்தவர். அவருடைய தோழிகளாக கணபதி நாடாரின் நான்கு மகள்களும் இருந்தனர்.
அவர்களுடன் எப்பவும் கூட்டணி அமைத்துக் கொண்டு கலகலப்பாக விளையாடியவர். பாய்ந்து வரும் வாய்க்கால் தண்ணீரில் எதிர்நீச்சல் போட்டு பந்தயத்தில் ஜெயிப்பவர்.
அடுக்கி இருக்கும் பனைகள் மீது ஏறி டான்ஸ் ஆடுவார். கோபம் வந்தால் நான்கு நாளைக்கு பேசாமல் இருப்பார். தோழிகளை காணாமல் தொங்கிய முகத்துடன் வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர், அவர்கள் மீது தவறு இருக்கா, நாம் மீது தவறு இருக்கா என்று யோசித்துப் பார்க்க மாட்டார். திடீர் என தானே முன் சென்று பேச்சை ஆரம்பிப்பார். ஆத்திரப்படவும், வருத்தபடவும், விட்டுக் கொடுக்கவும் தெரிந்தவர்.
அவரது தைரியத்தை பார்த்து, அவரை, அவர்கள் ஜான்சிராணி என்று அழைப்பார்களாம். உன் வீட்டுக்காரர் உனக்கு அடங்கித்தாடி போவார் என்று கிண்டல் செய்வார்களாம்.
அவ்வளவு தைரியசாலியான செல்வரங்கத்தை, சிறுபனையூரில் வசித்த தம்புசாமி மகன் சுப்பையன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். தாய் வீட்டில் இருந்த சுந்தந்திரம் கணவர் வீட்டில் கிடைக்கவில்லை.
பெண்கள் அடக்கம் ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று நீதிகளை போதித்து அடிமை வாழ்க்கையை வாழ வைத்தார்கள். யாரிடமும் சிரித்து பேசினால் கூட தவறு என்று அவரது சிரிப்பையும் பறித்துக் கொண்டார்கள்.
தாய் வீட்டில் ஜான்சிராணி போல தைரியமாக வாழ்ந்தவர், கணவர் வீட்டில் தைரியத்தை இழந்து கோழையானார். அதற்கு காலம் அவருக்கு ஜெயராமன் என்கிற மகனையும், ஜெயலட்சுமி என்கிற மகளையும் கொடுத்திருந்தது.
திடீர் என கணவர் இறந்துவிட அவரது மொத்த சந்தோஷமும் பறிபோனது. கொழுந்தனிடம் பேசினால் கூட குத்தம் என்றார்கள். அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இப்படிப்பட்டவர்கள் முகத்தில் இனி விழிக்கக் கூடாது என்று ஒரு நாள் முடிவு செய்தவர் தன்னை மாய்த்துக் கொண்டார்.
அவர் இறந்த செய்தி கிடைத்ததும் அதிர்ந்து போனார் என் தந்தை. அஞ்சலி செலுத்த சென்ற போதுதான் அவர் தூக்கு போட்டு இறந்தது தெரிய வந்திருக்கிறது. ஆத்திரத்தில் துடித்தார். இடுப்பில் இருந்த கத்தியை தடவிப் பார்த்துக் கொண்டார். இடுகாடு சென்ற பிறகு தங்கையை தற்கொலைக்கு தூண்டியவரை பழி தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அப்போது, தாய் இறந்து கிடப்பது கூட அறியாமல், தாயிடம் பால் குடிக்க முயன்றிருக்கிறார் அவரது மகள் ஜெயலட்சுமி. பால்குடி மறக்காத குழந்தையின் அந்த செயல், என் தந்தையின் மனதை மாற்றியது.
கோபத்தில் கொலை செய்து, அதன் எதிர்விளைவு சிறைக்கு செல்ல வேண்டி வரும். அதனால் வருமானம் இல்லாமல், தங்கை குழந்தைகள் மட்டுமல்ல, அக்காள் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று யோசித்துப் பார்த்தார். ஆனாலும் மனம் ஆறவில்லை.
அதனால், கத்திக்கு இடம் கொடுக்காமல், கத்தியும் பேசாமல், புத்திக்கு மட்டும் வேலை கொடுத்தார்.
அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆணாதிக்க சிந்தனையும், ஆத்திரமும்தான் காரணம் என்பதை புரிந்து கொண்ட என் தந்தை, இனி இந்த ஊரில் இருக்கக் கூடாது என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்ல முடிவு செய்தார்.
ஆனால், சுப்பையாவின் சகோதரர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளை நாங்களே வளர்த்து கொள்கிறோம் என்று குழந்தைகளை அனுப்ப மறுத்துவிட்டார். ஊரும் உறவும் அதையே சொன்னது. அவர்கள் இருந்தால்தானே அவர்களுக்கு பாதுகாப்பு. இல்லையென்றால் கோபாலகிருஷ்ணன் கோபத்தில் குடலை பிடுங்கி மாலையாக போட்டுக் கொள்வானே?
அன்று அந்த ஊரில் இருந்து கிளம்பிய என்னுடைய தந்தை, என் தங்கை இறந்த இந்த மண்ணில், இனி தன் கலாடி படக் கூடாது என்று உள்ளுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்.
தனது இறுதி மூச்சு வரை அந்த கிராமத்திற்குள் அவர் நுழையவே இல்லை.
என் தந்தையினுடைய தங்கை பெயர் செல்வரங்கம். பெயரைப் போலவே செல்லம். கடைக்குட்டி என்பதால் செல்லமாக வளர்ந்தவர். அவருடைய தோழிகளாக கணபதி நாடாரின் நான்கு மகள்களும் இருந்தனர்.
அவர்களுடன் எப்பவும் கூட்டணி அமைத்துக் கொண்டு கலகலப்பாக விளையாடியவர். பாய்ந்து வரும் வாய்க்கால் தண்ணீரில் எதிர்நீச்சல் போட்டு பந்தயத்தில் ஜெயிப்பவர்.
அடுக்கி இருக்கும் பனைகள் மீது ஏறி டான்ஸ் ஆடுவார். கோபம் வந்தால் நான்கு நாளைக்கு பேசாமல் இருப்பார். தோழிகளை காணாமல் தொங்கிய முகத்துடன் வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர், அவர்கள் மீது தவறு இருக்கா, நாம் மீது தவறு இருக்கா என்று யோசித்துப் பார்க்க மாட்டார். திடீர் என தானே முன் சென்று பேச்சை ஆரம்பிப்பார். ஆத்திரப்படவும், வருத்தபடவும், விட்டுக் கொடுக்கவும் தெரிந்தவர்.
அவரது தைரியத்தை பார்த்து, அவரை, அவர்கள் ஜான்சிராணி என்று அழைப்பார்களாம். உன் வீட்டுக்காரர் உனக்கு அடங்கித்தாடி போவார் என்று கிண்டல் செய்வார்களாம்.
அவ்வளவு தைரியசாலியான செல்வரங்கத்தை, சிறுபனையூரில் வசித்த தம்புசாமி மகன் சுப்பையன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். தாய் வீட்டில் இருந்த சுந்தந்திரம் கணவர் வீட்டில் கிடைக்கவில்லை.
பெண்கள் அடக்கம் ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று நீதிகளை போதித்து அடிமை வாழ்க்கையை வாழ வைத்தார்கள். யாரிடமும் சிரித்து பேசினால் கூட தவறு என்று அவரது சிரிப்பையும் பறித்துக் கொண்டார்கள்.
தாய் வீட்டில் ஜான்சிராணி போல தைரியமாக வாழ்ந்தவர், கணவர் வீட்டில் தைரியத்தை இழந்து கோழையானார். அதற்கு காலம் அவருக்கு ஜெயராமன் என்கிற மகனையும், ஜெயலட்சுமி என்கிற மகளையும் கொடுத்திருந்தது.
திடீர் என கணவர் இறந்துவிட அவரது மொத்த சந்தோஷமும் பறிபோனது. கொழுந்தனிடம் பேசினால் கூட குத்தம் என்றார்கள். அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இப்படிப்பட்டவர்கள் முகத்தில் இனி விழிக்கக் கூடாது என்று ஒரு நாள் முடிவு செய்தவர் தன்னை மாய்த்துக் கொண்டார்.
அவர் இறந்த செய்தி கிடைத்ததும் அதிர்ந்து போனார் என் தந்தை. அஞ்சலி செலுத்த சென்ற போதுதான் அவர் தூக்கு போட்டு இறந்தது தெரிய வந்திருக்கிறது. ஆத்திரத்தில் துடித்தார். இடுப்பில் இருந்த கத்தியை தடவிப் பார்த்துக் கொண்டார். இடுகாடு சென்ற பிறகு தங்கையை தற்கொலைக்கு தூண்டியவரை பழி தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அப்போது, தாய் இறந்து கிடப்பது கூட அறியாமல், தாயிடம் பால் குடிக்க முயன்றிருக்கிறார் அவரது மகள் ஜெயலட்சுமி. பால்குடி மறக்காத குழந்தையின் அந்த செயல், என் தந்தையின் மனதை மாற்றியது.
கோபத்தில் கொலை செய்து, அதன் எதிர்விளைவு சிறைக்கு செல்ல வேண்டி வரும். அதனால் வருமானம் இல்லாமல், தங்கை குழந்தைகள் மட்டுமல்ல, அக்காள் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று யோசித்துப் பார்த்தார். ஆனாலும் மனம் ஆறவில்லை.
அதனால், கத்திக்கு இடம் கொடுக்காமல், கத்தியும் பேசாமல், புத்திக்கு மட்டும் வேலை கொடுத்தார்.
அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆணாதிக்க சிந்தனையும், ஆத்திரமும்தான் காரணம் என்பதை புரிந்து கொண்ட என் தந்தை, இனி இந்த ஊரில் இருக்கக் கூடாது என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்ல முடிவு செய்தார்.
ஆனால், சுப்பையாவின் சகோதரர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளை நாங்களே வளர்த்து கொள்கிறோம் என்று குழந்தைகளை அனுப்ப மறுத்துவிட்டார். ஊரும் உறவும் அதையே சொன்னது. அவர்கள் இருந்தால்தானே அவர்களுக்கு பாதுகாப்பு. இல்லையென்றால் கோபாலகிருஷ்ணன் கோபத்தில் குடலை பிடுங்கி மாலையாக போட்டுக் கொள்வானே?
அன்று அந்த ஊரில் இருந்து கிளம்பிய என்னுடைய தந்தை, என் தங்கை இறந்த இந்த மண்ணில், இனி தன் கலாடி படக் கூடாது என்று உள்ளுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்.
தனது இறுதி மூச்சு வரை அந்த கிராமத்திற்குள் அவர் நுழையவே இல்லை.